நாட்டுப்பற்றும் அரசாங்கப்பற்றும்!
ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா என்ற வார்த்தை பிரயோகம் சற்று சிந்திக்கத் தூண்டுகிறது. இது வெறும் அமெரிக்கா மட்டுமா அல்லது லத்தீன் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நைஜீரியா, இராக், மத்திய கிழக்கு படையெடுப்பு மற்றும் ஆக்ரமிப்பு முன்பு வியட்னாம் எண்ணற்ற கலகங்கள், எண்ணற்ற போர்கள் புரிந்து போலி ஜன நாயகத்தை நிலைனாட்டும் அலங்காரப்பேச்சுகளுடன் கூடிய அத்தனை அராஜகங்களையும் உள்ளடக்கிய ஐக்கியமா?
நாட்டிற்காக உயர் துறந்த இளம் வீரர்கள், போர் பற்றி நாம் நேர்மையாக இருப்போம் போன்ற அரசு சார், அமெரிக்க பத்திரிக்கை சார்பு சுதந்திர அலங்கார வெற்றுச் சொற்கள் புழங்கதுவங்கியுள்ளன.
உயிரை தியாகம் செய்தவர்கள் நாட்டிற்காக செய்யவில்லை அரசாங்கத்திற்காக செய்கிறார்கள் அதன் அராஜக வெளியுறவு கொள்கைகளுக்காக செய்கிறார்கள். அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் வேறுபாடு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் ஜூலை 4ம் தேதி அமெரிக்க தலைகளின் உதடுகளிலும் பத்திரிக்கை பேனா முனைகளிலும் நெளியும் வார்த்தை ஆனால் அதன் அர்த்தம் பற்றிய அறிவு மருட்சியுடன்.
அமெரிக்க சுதந்திர பிரகடனம் என்ன கூறுகிறது? அரசாங்கங்கள் என்பது செயற்கையான உருவாக்கமே, மக்களின் ஒப்புதலுடன் கூடிய நியாயமான அதிகாரங்களை வருவித்துக் கொள்வது, அனைவருக்கும் சமமான வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அது வலியுறுத்துகிறது, இதற்கு எதிரான அல்லது இதனை சிதைக்கும் எந்த ஒரு அரசையும் நீக்குவது அல்லது தூக்கி எறிவது மக்களின் உரிமை என்று கூறப்பட்டுள்ளது.
மனித வாழ்வின் புனிதமும் சுதந்திரமும் முக்கிய கொள்கைகளாக பிரகடனிக்கப்படும் அமெரிக்க சுதந்திர தீர்மானத்தை அமெரிக்க அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. பனாமாவை படையெடுத்து ஆக்ரமித்தது ஆபரேஷன் ஜஸ்ட் காஸ் என்றும் இராக் போர் இராக் விடுதலை நடவடிக்கை என்றும் வர்ணிக்கப்படுகிறது. பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டது போல் இது மகிழ்ச்சியை நோக்கிய லட்சிய நகர்வு அல்ல மாறாக லாபம் மற்றும் அதிகாரத்திற்கான அராஜக விழைவு. அமெரிக்காதான் முக்கியம் என்ன தவறு செய்தாலும், இந்தியாதான் முக்கியம் அது என்ன தவறு செய்தாலும் என்ற போக்குகள் நாட்டுப்பற்று என்ற பெயரில் இருந்து வருவது வருத்தத்திற்குறிய விஷயமே.
இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டு வந்த அத்தனை ஆண்டுகாலங்களிலும் காங்கிரஸ், காந்தி, சுதந்திரப்போர் ஆகியவையெல்லாம் அறியாமலேயே லட்சக்கணகான ஆதிவாசிகள் கொத்தடிமைகளாக இந்தியாவில் வாழ்ந்திருக்கின்றனர். மேற்கு வங்க காடுகளில் கொடூரமான ஆங்கிலேய, இந்திய பனியா சேட்டுகளின் கொடுங்கோல்களுக்கு ஆளான முண்டா இனம் பற்றி நம் வரலாற்று பாடப்புத்தகத்தில் கிடையாது. பாடத்திட்டத்தை இடது சாரிகள் கைவசம் வைத்திருந்தாலும் ஆதிக்க காங்கிரஸ் அல்லது மத பயங்கரவாத ஆர் எஸ் எஸ்-பாஜக வைத்திருந்தாலும் நாம் இந்த அடித்தட்டு மக்கள் வரலாற்றை அறியவே முடியாது. மேட்டுக் குடி வரலாற்று எழுத்தாளர்கள் சுதந்திரப்போரை வெறும் மேட்டுக்குடி போராட்டமாகவே சித்தரித்துள்ளனர்.
அந்த போராட்டங்களில் பெரும்பகுதி அதிகார மாற்றத்திற்கும், மாறும் அதிகாரத்தில் சாதி மற்றும் வர்க்க பங்குகளுக்காகவும் விழைவு கொண்டவைகளே என்பது குறிப்பிடக்கது.
இன்னமும் ஆதிவாசிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. நர்மதை நதி அணையை உயர்த்துவதில் ஏகப்பட்ட ஆதிவாசிகளின் வாழ்வு பறிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எடுத்துக் கூறியும் குஜராத் காங்கிரஸ் மற்றும் பாஜக அதனை ஒரு லட்சியமக கொண்டுள்ளது. அதனை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு, புறக்கணிப்பு போன்ற அச்சுறுத்தல்களை தொடுத்துவருகிறது. திட்டத்தால் அப்புறப்படுத்தப்பட்டவர்களுக்கு பணம் கொடுப்பது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தும் பணம் கைமாறுகிறது. நிலம்தான் கொடுக்கவேண்டும். மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நியாயமற்ற முறையில் ஆர்பாட்டம் செய்த போது நீதித் துறை ரொம்ப பொறுப்பாக மூக்கை நுழைக்கிறது. இது மட்டுமல்ல இன்னமும் தனக்கு தேவையில்லாத மற்றும் அதிகாரமில்லாத பிரதேசங்களில் எல்லாம் உச்ச நீதிமன்றம் மூக்கை நுழைக்கிறது. தனது தீர்ப்பை எதிர்த்து செயல்படும் குஜராத் அரசு விவகாரத்தில் கப்சிப்பென்று இருக்கிறது. ஆனால் இந்தியா ஒளிர்கிறது என்ற கூக்குரல் நாடு முழுதும் ஒலிக்கிறது.
ஆகவே அமெரிக்கா ஒழிக என்று கூறிவிட்டு இங்கிருக்கும் மேட்டுக்குடிகள் அதில் ஒளிந்து கொள்ளமுடியாது, அமெரிக்கா பிற ஏழை நாடுகளுக்கு செய்வதை இந்தியாவின் கார்ப்பரேட் ஆட்சி உள் நாட்டு ஏழைகளுக்கு செய்கிறது.
நாட்டுப்பற்று என்பது உண்மையான பொருளில் புரிந்து கொள்ளப்படவேண்டுமென்றால் ஜன நாயகத்தின் கொள்கைகளுக்கு அது இசைவதாக இருக்கவேண்டும். பிலிப்பைனின் சிறு தீவில் ரூஸ்வெல்ட்டின் ராணுவம் நுழைந்து குழந்தைகளையும் பெண்களையும் கொன்றது குறித்து ரூஸ்வெல்ட் பாராட்டினால் அவர் நாட்டுப்பற்று உடையவரா?
மேதா பட்கர் நர்மதை நதி பாதுகாப்பிற்காகவும், மும்பை குடிசை இடிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் ஏழைகளுக்காகவும் உண்ணா விரதம் இருந்தால் அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளை தொடுக்கும் அதாவது பொது நல வழக்கு என்று அதற்கு ஒரு அசிங்கமான பெயர் வேறு, அரசாங்கத்தை வழி நடத்தும் தலைவர்கள் நாட்டுப்பற்று உடைவர்கள் என்று பொருளா?
இன்று ஆப்கான் மற்றும் இராகில் உயிர் விடும் ராணுவத்தினர்கள் நாட்டுப்பற்றிற்காகவா உயிர் துறக்கிறார்கள்? இவர்கள் அரசாங்கத்திற்காக உயிர் விடுகிறார்கள். எண்ணெய் முதலாளிகளுக்காவும் அமெரிக்காவை விரிவு படுத்தவும் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட தலைவர்களின் அரசியல் அரைகுறை லட்சியங்களையும் நிறவேற்ற உயிர் துறக்க வைக்கப்படுகின்றனர். அமெரிக்க அரசிற்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கலின் சுரண்டலுக்கும் நட்பு ரீதியாக உள்ள எதேச்சதிகாரிகளியும் கொடுங்கோலர்களையும் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட சிறிய நாடுகளில் ஆனால் எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளில் ஆதரித்து வருகிறது. கியூபாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டி விடுகிறது.
நாம் சுதந்திரம் என்பதை மறு விளக்கத்திற்கும் மறு வாசிப்பிற்கும் உட்படுத்தவேண்டும், இதன் குறுகிய தேசியவாத நலந்களை தகர்த்து எறியவேண்டும். அமெரிக்க நலனுக்காக உலகமயமாதல் என்றபெயரில் தேச எல்லைகள் அராஜகமாக விஸ்தரிக்கப்படும்போது, அதன் காரணங்களே மனித நலத்திற்கும் நீதிக்கும் முட்டுக்கட்டைகளாக அமைந்து விடுவதில்லையா?
கோதுமை விளைச்சலை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரில் இந்தியா தாரை வார்த்து பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை எந்த நாட்டுப்பற்றுடன் சேர்ப்பது என்று தெரியவில்லை. மக்களுக்கென்று அரசாங்கத்திற்கான சில கடமைகள் உள்ளது. அதனை லாப நட்ட கணக்குகளுக்குள் சொருகி டர்பனில் சொருகிக் கொள்ளமுடியாது. தேசம் என்பது கார்ப்பரேட் கம்பெனியல்ல என்பதை உணரும் அரசாங்கமே தேசத்திற்கும் மக்களுக்கும் நியாயமாக இருக்கமுடியும்.
ஜூலை 4 மட்டுமல்ல ஆகஸ்ட் 15ம் தேதியையும் நாம் மேற்சொன்ன பிரக்ஞையுடன் அணுகுவதே அறிவு பூர்வமானது.

3 Comments:
nice
\\தேசம் என்பது கார்ப்பரேட் கம்பெனியல்ல\\
அருமை
ஐக்கிய அமெரிக்கா என்பதை விட ஆக்கிரமிப்பு அமெரிக்கா என்றால் சாலப் பொருந்தும். மறைமுக ஆக்கிரமிப்பு உத்திகளைப் பற்றி புத்தகம் எழுத வேண்டுமானால் அமெரிக்க வரலாறை ஆராய்ந்தால் போதும்.
//வெற்றுச் சொற்கள்//
ஆங்கிலம் என்றாலே வெற்றுச் சொற்களின் அலங்காரம் தானே!
//இந்தியாதான் முக்கியம் அது என்ன தவறு செய்தாலும்//
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!
நாட்டு பற்று என்று வரும் போது மனிதநேயம் தேர்ந்து விடுவதும், அழிந்து விடுவதும் உண்மைதான். அதைத் தவிர்க்க முடியாது. ஏன் என்றால் நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாலுபேரைக் கொன்று தான் ஆக வேண்டும். இது தான் உலகியல் வாழ்வு.
ஆன்மீக நெறியில் நாட்டை வழிநடத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும். மனிதர்களின் அறிவு அந்நிலைகு உயர வேண்டும். அந்தநிலையில் நாட்டுப்பற்று என்பது மறைந்து, அனைத்து உயிரையும் ஒன்றாய் பார்க்கும் நிலையில் அரசாங்கம் அமைக்கப்படும்.
காலம் மாறும் என்று நம்புவோம்.
அருமையான கருத்தாராய்ச்சிக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
Post a Comment
<< Home