ராஜமார்த்தாண்டனுக்கு திருநெல்வேலி கோயில் ராஜ் கடிதம்
நூல்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
ஆசிரியர்: ராஜமார்த்தாண்டன்
ராஜமார்த்தாண்டனுக்கு திருநெல்வேலி கோயில் ராஜ் கடிதம்
அன்புள்ள அண்ணாச்சிக்கு,
குஜராத்ல அவ்வளவு பேர் செத்துப் போனப்புறம், கவிதைப் பத்தி பேச, படிக்க கொஞ்சம் பிரச்னையாத்தாங்க இருக்கு. ஆனா எழுத ஒண்ணும் பிரச்னை இல்ல போல இருக்குங்க. இருக்க இடங்கிடச்சுருச்சுன்னு, உயர உயரமா கட்டடத்த கட்டினாங்க அண்ணாச்சி, பூமா தேவி பாரந்தாங்காம பொங்கி எழுந்து ஓஞ்சுட்டாங்க. அதுபோலதாங்க பேப்பர் கிடச்சுடுச்சுன்னு எல்லாரும் எழுத ஆரம்புச்சுடுறாங்க. மரத்த அழிச்சுதாங்க பேப்பர் செய்றாங்க, நாம அதே பேப்பர்லயே `மரம்' அழிஞ்சுட்டிருக்குன்னு வருத்தப்படறோங்க என்ன செய்றது அண்ணாச்சி - பூமி மாதிரி ஒரு நாள் மரங்களுக்கு கோவம் வந்துச்சுன்னு வச்சுக்குங்க, அது கவிஞர் - நியூஸ் பேப்பர் ஆசாமின்னு பிரிச்சு பாக்காதுங்க, மரத்த வெட்டி பொழப்பு நடத்துறவன தேவதேவன் அண்ணாச்சி திட்றாருங்க, ஆனா அந்த பொழப்புல நமக்கும் பங்கு இருக்குங்க; மரம் தன்ன அழிச்சுட்டாங்களேன்னு கோபப்படறதவிட, அழிச்சதுக்காக புலம்பி கவித எழுதறவங்களக்கண்டா அதிக கோபப்படும்னு எங்க தாத்தா தாமோதர ஆசான் சொல்லியிருக்காங்க தெரியுமா?
இந்தியால இப்ப குழந்த பொறக்கற எண்ணிக்கையை விட கவித பொறக்கற எண்ணிக்கை அதிகமாயிடுச்சுன்னு தோணுது, இந்த ரேட்ல போச்சுன்னா தாங்காதுன்னு தோணுது அண்ணாச்சி! சரி நாம கவித பத்தி பேச ஆரம்பிப்போங்க.
கவிதைக்கு `பித்து' புடிக்கணும்னு ஜெயமோகன் சார் சொன்னதா நீங்க சொல்றீங்க ஆனா, ஏற்கனவே நிறைய பித்து புடிச்சுப் போயிடுச்சுங்க, இந்த பித்த ஓட்டறதுக்கு யாராவது மந்திரவாதி கெடச்சா கூட பரவால்லங்க. அப்படியும் ஒரு மந்திரவாதி பத்தாதுன்னு தோணுது அண்ணாச்சி. நீங்க என்ன சொல்றீங்க?
`எல்லாமே நம்பிக்கையில் தான்' னு ஒரு கவித எழுதியிருக்கீங்க, இதே போல ஒரு கவித பசுவையா அண்ணாச்சி எழுதியிருக்காருங்களே. `யாரோ ஒருவனுக்காக' ங்கற கவிததாங்க அது. அதுல அவரு யாரோ ஒருவருக்காக காத்திருக்காருங்க, ஆனா நீங்க எங்க கண், காது, எங்க வாரிசு எல்லாத்தையும்ல இதுல போட்டு இழுக்கிறீங்க! இது நியாயமா அண்ணாச்சி, எங்க தலை எழுத்துதான் கவித படிக்க வச்சுடுச்சு, அவங்க தலைஎழுத்துமாங்க அப்டி இருக்கணும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க . . `சுதந்திரம்' னு ஒரு கவிதயும் பசுவையா அண்ணாச்சி கவிதய ஞாபகப் படுத்துதுங்க. நீங்கள்ளாம் பாமரங்க ரசிக்கற கவிதய பிரச்சாரமா இருக்குன்னு, ஒதுக்குறீங்க, ஆனா `சுதந்திரம்' கவித மட்டும் என்ன பெரிய உன்னத பிரசாரமாங்க? நான் கேக்கலீங்க, எங்க பக்கத்துல இருக்கற `கவியரசு' பித்தன் கேக்கறாருங்க. கோச்சுக்காதீங்க, நீங்க புதுமைப்பித்தன் - ரசிகர் மன்றம் வச்சுருக்கீங்க - அவுங்க கவியரசு - ரசிகர் மன்றம் வச்சுருக்காங்க. என்ன வித்யாசம்னு கேட்டா, வாழ்வு, சாளரம், உன்னதம், தரிசனம்னு என்னன்னமோ புரியாத வெஷயத்த எங்க தலைல கொண்டு போடுறீங்கன்னு - மறுபடியும் நான் கேக்லீங்க எங்க ஊரு கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்ற தலைவரு கேக்காருங்க. அவுங்கள விடுங்க அண்ணாச்சி, அவுகளுக்கு வேறவேல கெடையாது, இது மாதிரிதான் பதில்சொல்ல முடியாத கேள்வியெல்லாம் ஒங்க கிட்ட கேப்பாங்க.
`பார்வையாளனின் சோகம்' - ங்கற கவித தலைப்பே தப்பா இருக்குங்க. கவிதைல நீங்க சொன்னது ஆக்ஸிடென்ட்ல செத்துப் போனவன பத்திங்கறத மறந்து பாக்கற கவிஞனோட சோகங்கற மாதிரி ஆயிடுச்சே எப்டி அண்ணாச்சி, செத்துப் போனவனோட சொந்தக்காரங்க சோகமும் ஒங்க சோகமும் ஒண்ணாகும். `வால்மனிதன்' - கவித ஒரு தமாசு கவிதங்க சொல்றேன்னு கோச்சுக்காதீங்க, 1999-ல எழுதியிருக்கீங்க அந்த கவிதய ஆனா ரொம்ப நாள் முன்னாடியே `வால் பையன்'- னு ஒரு டிராமா எஸ்.வீ. சேகர் போட்டுருக்காருங்க. வால் முளக்கிறத நக்கல் பண்ணியிருக்காருங்க அந்த நாடகத்துல, சேகரண்ணாச்சி.
"இப்போதெல்லாம் அரிதாகி வருகின்றன/ வாலில்லாமல் அவன் நடமாடும் கணங்கள்"அப்டீன்னு முடிச்சுருக்கீங்க நாடகத்துலயும் சேகரோட கவல அதாங்க என்ன பண்றதுங்க நீங்க காமெடிக் கவிஞனாயிட்டீங்க, சேகர் `தேடல்' கலைஞனாயிட்டாருங்க. அப்பிடீன்னு நான் சொல்லல அண்ணாச்சி, எங்க வீட்டு கிளி சொன்னுச்சுங்க. அப்புறம் உங்க `மனப்பறவை' கிட்ட சொல்லி நான் எழுதிக்கிட்டுருக்கும் போதே ஒங்க புஸ்தகத்த இழுத்துக்கிட்டு போன எலியக்கண்டுபிடிச்சு, புஸ்தகத்த புடுங்கிட்டு வரச் சொல்லுங்க அண்ணாச்சி ஏன்னா, அழுதுட்ருக்கற குழந்தைக்கு கொய்யாப்பழம் கொடுத்த வள்ளல் பறவையாச்சுதுங்களே ஒங்களோட `மனப்பறவை'. தயவு செஞ்சு இந்த மாதிரி கவிதங்கள எழுதாதீங்க அண்ணாச்சி. தெரியாம படிச்சுட்டு, எங்கப்பா என்ன போட்டு அடிக்கறாருங்க. இதயும் முடிஞ்சா ஒங்க மனப்பறவகிட்ட சொல்லுங்க அண்ணாச்சி - நேர்ல வந்து சொல்லுங்க - மறுபடியும் கவித மூலமா சொல்லாதீங்க அடிவாங்க என் உடம்புல தெம்பு இல்ல அண்ணாச்சி;
எல்லாப்பறவையும் மேல பறந்தாலும் பார்வை, இரை தேடி பூமிலதாங்க இருக்கும்னு தாமோதர ஆசான் சொல்லியிருக்காருங்க, ஆனா இந்த கவிஞர்களோட பறவ மட்டும் எப்பவுமே மேலேயே இருக்குதுங்க, ஒங்க பார்வைய கொஞ்சம் கீழே திருப்புங்க அண்ணாச்சி, மேலயே பாத்திக்கிட்டுருந்தா இங்க ஏதாவது தந்தி கம்பத்துல போய் இடிச்சுக்க வேண்டியது தான். ஒங்க நல்லதுக்கு சொல்றேன், மறுபடியும் தந்தி கம்பம் மேல்நோக்கி இருக்குனு நீங்க சொன்னா உங்கள திருத்த முடியாதுன்னு சொல்றதத்தவிர எனக்கு ஒண்ணும் தோணலீங்க.
இறுதியா ஒண்ணு சொல்றேங்க; மரம், செடி, பறவை, பூச்சி, மிருகம் எல்லாம் கவித புஸ்தகத்துல இருக்குதுங்க, ஏதோ காட்டுக்குள்ளேயோ அல்லது மிருகக்காட்சி சாலைக்குள்ளேயிருந்து எழுதியிருக்கீங்க போல, ஆனா நான் சின்னப் பையங்கறதுனால `ஜு' சுத்திப்பாத்த திருப்தி இருக்குங்க அண்ணாச்சி. ஆனா எனக்கு அடுத்த புத்தகத்துல எலக்ட்ரிக் ட்ரெயின், மேம்பாலம், பறக்கும் ரயில் பத்தி எழுதுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு அண்ணாச்சி;
அப்பா சத்தம் போடறது கேக்குது அண்ணாச்சி, மளிகை கடைய விட்டு என்ன படிப்பு வேண்டிக்கிடக்குனு கேக்கறாருங்க, ஒங்க புத்தகத்த ஒளிச்சு வச்சு படிக்கும் போதுதாங்க எலி இழுத்துகிட்டு போயிடிச்சு; `மனப்பறவை' கிட்ட கொஞ்சம் சொல்லி மீட்டுக்குடுங்க, ஆனா `எலி' வச்சுருக்கறதே சேஃப்டி அண்ணாச்சி, இங்கவந்துதுன்னா எங்க அப்பா பொட்டலங்கட்ட எடுத்துக்குவாரு. வரட்டுமா அண்ணாச்சி,
என்னிக்கும் அன்புடன்,
உங்கள் கோயில் ராஜ்

3 Comments:
விமர்சிக்கப்பட்டுள்ள கவி நூலைப் படித்தவர்களுக்கு இவ்விமர்சனம் நல்விருந்தாய் அமையும் என்று நம்புகிறேன்.
annachi methu enna kovam? avar field out aagi niraya naalachi.
நான் ராஜமார்த்தாண்டன் புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆனால் இதைப் படித்ததும் மரத்தடி.காமில் மனப்பறவையையும் வாள் என்ற கவிதையையும் படித்துப் பார்த்தேன். உங்கள் நக்கல் bull's eye என்று உணர்ந்தேன்.
Post a Comment
<< Home